அடடா.. அரைமணி நேர மழைக்கே தாங்காத சென்னை.. ஜிபி ரோட்டில் தேங்கிய வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: திடீரென பெய்த கனமழை காரணமாக சென்னை ஜிபி சாலையில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் அடிக்கடி மழை நீர் தேங்கி நிற்பதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது வரை இதற்கான நிரந்தர தீர்வு காணப்படவில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டின் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வேலூர், மதுரை மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வெயில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்தியது. அக்னி வெயில் முடிந்த பின்னர் கூட வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. அதேபோல பருவமழையும் சற்று தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பெய்தது. சென்னையில் இயல்பை விட அதிக அளவில் மழை பொழிந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் புறநகர் பகுதிகளான முகப்பேர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், ரெட்டேரி, மாதவரம், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளிலும், நகர் பகுதிகளான கோடம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, ஸ்பென்சர், மயிலாப்பூர் போன்ற இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக நகரின் முக்கிய பகுதியான ஜிபி சாலையில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. லேசாக மழை பெய்தாலே இந்த சாலையில் வெள்ளம் போல நீர் தேங்கிவிடுகிறது என அப்பகுதி வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது இந்த நீரை அப்புறப்படுத்த மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. மாநகராட்சியின் மழைநீர் வடிகால் கால்வாய் அளவு சிறியதாக இருப்பதால் இதன் வழியாக மழை நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறையின் மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கி நிற்கும் மழைநீரை திருப்பிவிடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை வழியாக பயணிப்போர் பள்ளம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் பைக்கில் சென்று விழும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. அதேபோல இந்த சாலையில் நிற்க வைக்கப்பட்டுள்ள பைக்குகளின் சைலன்சருக்குள் மழை நீர் சென்றுவிடுவதால் என்ஜின் கோளாறு ஏற்பட்டுவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு இதுபோல 30-35 நிமிடங்கள் வரை இடைவிடாத மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இந்த ஜிபி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications