சென்னைக்கு சம்பவம் இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்! உஷார் மக்களே!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அக்.17ம் தேதி முதல் சென்னையில் பருவமழை தீவிரமடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்த அவர் தனது x பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைய உள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (நவ. 16) முதல் மழையைக் கொடுக்கத் தொடங்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நவம்பர் 17 முதல் மழை தொடங்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை நவம்பர் 16 முதல் 18 வரை இருக்கும். இது வடகிழக்கு பருவமழையின் தீவிரமான கட்டமாகும். இந்திய வானிலை ஆய்வு மையமும் இந்த மழையை உறுதி செய்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை தொடரும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
அதேபோல சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நேற்று (14-11-2025) தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (15-11-2025) காலை 0830 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்.
இதன் காரணமாக, இன்று (நவ.15) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.16ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.17ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.18ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20 மற்றும் 21 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (15-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (16-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications