இன்று 20 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. அடுத்த 4 நாட்களுக்கு நிற்காதாம்! சென்னைக்கு மழை இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் அக். 24ம் தேதிக்குப் பின்னரே மழை மெல்லக் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பெய்துள்ளது.

மழை: அதிகபட்சமாக சாத்தியார் (மதுரை) 110 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 90 மிமீ, ஆண்டிபட்டி (மதுரை) 80 மிமீ மழை பெய்துள்ளது. வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 35.1° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.2° செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
20 மாவட்டங்களில் கனமழை: இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் என்ன கிளைமேட்: வரும் அக். 22ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக். 23ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக். 24ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக். 25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 26ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் அக். 22ம் தேதி மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எச்சரிக்கை: அக். 23ம் தேதி மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக். 24ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு - வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல்: அரபிக்கடல் பகுதிகளில் இன்று மத்தியகிழக்கு அரபிக்கடல், மத்தியமேற்கு அரபிக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications