Chennai Rain Alert: சென்னையில் இன்னைக்கும் மழை பெய்யும்.. கோவை, நீலகிரியில் கனமழை! வானிலை மையம் அலர்ட்
சென்னை: சென்னையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 238.5 மிமீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலங்களில் 252 மிமீ அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். எனவே மழை இயல்பை விட 5 சதவீதம் குறைவாகவே பெய்து இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில்,

"நேற்று (17-08-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (18-08-2025) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் வலுப்பெற்று காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 19 ஆம் தேதி (நாளை) முற்பகல், தெற்கு ஒரிசா-வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது. தெற்கு கொங்கன் - வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆக.20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (18-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (19-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சராசரியாக 191.4 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலங்களில் 168.4 மி.மீ மழைதான் இயல்பான மழையின் அளவாகும்.
அந்த வகையில் இயல்பான மழையை விட 14 சதவீதம் மழையின் அளவு அதிகமாக பெய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 359 சதவீதம் இயல்பை விட மழை அதிகமாக பதிவாகி இருக்கிறது. திருநெல்வேலியில் இந்த காலங்களில 48.6 மி.மீ மழைதான் இயல்பான அளவாகும். ஆனால் 222 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. திருநெல்வேலியை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் 99 சதவீதம் அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பதிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications