இரவில் மொத்தமாக மாறிய கிளைமேட்.. சென்னையில் பல இடங்களில் கொட்டி தீர்த்த மழை.. இன்று மழை தொடருமா?
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதீத வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்றிரவு பரவலான இடங்களில் நல்ல மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் அதிகமாக இருந்தது. பதிவாகும் வெப்பம் இங்குக் குறைவாக இருந்தாலும் ஈரப்பதம் காரணமாக மக்கள் உணரும் வெப்பம் அதிகமாகவே இருந்தது.

சென்னை கிளைமேட்: அதாவது சென்னை கடலுக்கு அருகே அமைந்துள்ளதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடலில் உருவாகும் வியர்வைச் சீக்கிரம் ஆவியாகாது. வியர்வைத் தான் உடல் சூட்டைக் குறைக்கும் நிலையில், அதை இந்த ஈரப்பதம் தடுப்பதால் மக்கள் அசவுகரியத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், உடலில் ஒருவித பிசுபிசுப்பு தன்மை ஏற்படும்.
இந்த அதீத வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்றைய தினம் சென்னையில் வெப்பம் ஓரளவுக்குக் குறைந்தது. குறிப்பாக நேற்று மாலை நகரில் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் சூழ்ந்தன. மேலும், இடி மின்னலுடன் நல்ல மழையும் பெய்தது.
நள்ளிரவில் கொட்டிய மழை: சென்னை நகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. அதேநேரம் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மேலும், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
சென்னையில் திடீரென இந்த கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் சில பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டிய நிலையில், மின்சாரமும் சில பகுதிகளில் கொஞ்ச நேரம் துண்டிக்கப்பட்டது.
வானிலை மையம்: முன்னதாக இன்று சென்னையில் நிலவும் கிளைமேட் குறித்து வானிலை மையம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளது. அதில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications