சென்னையில் நள்ளிரவில் கொட்டிய மழை.. ஆனால் எங்குமே மழைநீர் தேங்கல.. மாநகராட்சி வெளியிட்ட அப்டேட்!
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சுரங்கப்பாதைகளின் தற்போதைய படங்களை வெளியிட்டு உள்ளது சென்னை மாநகராட்சி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை கொட்டியது.

சென்னையில் மழை பெய்தாலே, சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக சென்னையின் சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கும். தாழ்வாக உள்ளதால் மழைநீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
நள்ளிரவில் பெய்த கனமழையால் சென்னையில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், தற்போது அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மழைநீர் இன்றி போக்குவரத்து சீராக நடந்து வருகிது. சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளின் தற்போதைய நிலை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி.
தமிழக பகுதிகளின் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications