இது வெறும் ஆரம்பம் தான்.. சென்னைக்கு அடுத்த 2 மாதத்தில் இரண்டு புயல் உள்பட.. ஆறு முறை மழை இருக்கு?
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் பல இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இன்றும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 30 செமீ வரை மழை பெய்துள்ளது. சென்னையில் பல இடங்களில் 20 செமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 25ம் தேதி வரை ஐந்து முதல் 6 விதமான அமைப்புகள் மூலம் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் இரண்டு புயல்கள் வரை வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக சென்னையில் வடகிழக்கு பருவ மழை என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும். சில சமயங்களில் அபூர்வமாக ஜனவரி முதல் வாரம் வரை இருக்கும். தென்மேற்கு பருவ மழையின் மூலமும் சென்னைக்கு ஓரளவு மழை கிடைக்கும் என்றாலும், வடகிழக்கு பருவ மழை தான் அதிக மழைபொழிவினை தரும் பருவ மழையாகும். வடகிழக்கு பருவ மழை பொதுவாக அக்டோபர் 3வது வாரத்தில் தான் ஆரம்பிக்கும். ஆனால் தற்போது முன்னரே தொடங்கிவிட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் பல இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதவிர, இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் அறிவித்தபடியே சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு சரியாக 9மணிக்கு ஆரம்பித்த மழை இப்போது வரை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்றுதான் தொடங்கியது என்று வானிலைமையம் அறிவித்தாலும், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடிய மழை வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழையாகத்தான் கணக்கில் கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில், கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையில் 7 செ.மீ. பெய்ய வேண்டிய இடத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 84 சதவீதம் அதிகம் ஆகும்.
நேற்று இரவு வரையிலான நிலவரப்படி, சென்னையின் பல இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியது. இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, சென்னையில் ஓரிரு இடங்களில் 25 செ.மீ.க்கு மேல் பதிவாகி உள்ளது. வடசென்னையின் பல பகுதிகளில் 25 செமீ மழை பெய்துள்ளது. தென்சென்னை, மத்திய சென்னை பகுதிகளை பொறுத்தவரை 18 செ.மீ. முதல் 22 செ.மீ. வரையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செமீ மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை என்பது வழக்கமான இயற்கை நிகழ்வு. ஆனால் அதிக கனமழை பெய்யும் என்று அரசுக்கு நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட எச்சரிக்கைகளால் மக்கள் பீதி அடைந்தனர். வாகனங்களை பலர் மேம்பாலங்களில் நிறுத்தினார்கள். கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட நிலை , மீண்டும் ஏற்படுமோ என்று அச்சம் அடைந்தனர். காய்கறிகள், பழங்கள், சிற்றுண்டிகளை வாங்கி குவித்தனர். இதனால் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் உண்மையில் அச்சம் அடையும் அளவிற்கு நிலைமை சென்னையில் எங்குமே ஏற்படவில்லை.. அதேநேரம் அதிக கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதீத கனமழை பாதிப்பு அதிகமாக இருக்காது என்கிறார்கள். இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்,
அதேநேரம் வடகிழக்கு பருவமழை நேற்றுதான் தொடங்கியது. பொதுவாக சென்னைக்கு வடகிழக்கு பருவ மழை அதிக மழையை கொடுக்கும். அந்த வகையில் வெப்பச்சலனம், வானிலை நிகழ்வு, புயல் ஆகியவற்றின் காரணமாக மழைக்கான வாய்ப்பு அடுத்தடுத்து அதிகமாகவே உள்ளது.
அந்த வகையில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள்ளும், டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள்ளும் தமிழ்நாட்டில் கிட்டதட்ட 5 முதல் 6 விதமான அமைப்புகள் மூலம் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என வானிலை ஆய்வாளர்கள் கூறினார்கள். இதில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட புயல்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications