வங்கக் கடலின் மேல் சுழலும் மேலடுக்கு சுழற்சி! சென்னையில் அக்.14ல் கனமழை! பாலச்சந்திரன் தகவல்
சென்னை: சென்னையில் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யக் கூடும். மத்திய அரபிக் கடல் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது.
அக்டோபர் 12 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள். இந்த முறை நிறைய காற்றழுத்தங்கள் உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம், இயல்பைக் காட்டிலும் மழை இருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறது. நீண்ட கால வானிலை டேட்டாக்களை பார்த்தாலும் அதைத்தான் காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இதே மாதிரி இருக்கக் கூடிய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால் மழை இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
2024 ஆம் ஆண்டை போல் 1964, 2005, 2010, 2016, 2020 ஆகிய ஆண்டுகள் இருந்துள்ளன. இந்த ஆண்டுகளில் எல்லாம் மழை பொழிவு அதிகமாவே இருந்தது. இந்த ஆண்டுகளில் ஏதோ ஒரு நிகழ்வுகள் அந்தந்த ஆண்டுகளை ஹைலைட்டாக வைக்கும் அளவுக்கு இருந்துள்ளன. உதாரணமாக 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் வந்த புயல், 2005 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பெருவெள்ளம் இருந்தது.
2010 இல் சென்னையில் மழை இல்லாவிட்டாலும் இயல்புக்கு அதிகமாக 80 சதவீதம் அதிக மழை பெய்தது. 2016ஆம் ஆண்டு சென்னையில் வர்தா புயல் வந்தது. அது போல் மழை மிகவும் குறைந்த ஆண்டுகளும் இருந்துள்ளன. ஆனால் 2024 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்யலாம் என்பதைத்தான் பேட்டர்ன்கள் சொல்கின்றன.
வடகிழக்கு பருவமழை என்றாலே இந்திய வானிலை மையத்தை கேட்டால் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் என்பார்கள். ஆனால் விவசாயிகள், மார்கழியில் மழை வராது என்பார்கள். ஆனால் லாலினோ ஆண்டை பொருத்தமட்டில் ஜனவரி மாதம் மழையை பார்க்கலாம். ஏற்கெனவே இருக்கும் டேட்டாக்களை வைத்து பார்த்தால் லாலினோ ஆண்டுகளில் ஜனவரியில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு 5 முதல் 7 வெப்பச்சலனங்கள் உருவாகும். அதில் 2 அல்லது 3 புயல்களாக மாறும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications