கடலுக்கு நடுவே “பூதம்”.. வானிலை மையம் வெளியிட்ட சூறாவளி அலர்ட்! மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப நிலை இயல்பான அளவை விட 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கும் என்றும், கடலுக்கு நடுவே சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பிப்ரவரி 18 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 24 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 32 - 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: பிப்ரவரி 18 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications