வங்க கடலில் திடீர் மாற்றம்! தமிழகத்தில் 2 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று பாம்பன் மற்றும் தூத்துக்குடி என 2 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், காற்றுடன் பலத்த மழை பெய்யும், இதனால் துறைமுகத்திற்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனவும் அர்த்தம்.

முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில், "நேற்று காலை ஒரிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (29-05-2025) காலை 0530 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, 0830 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.
இது சாகர் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகாவிற்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், கேபுபாராவிற்கு (வங்கதேசம்) மேற்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, மேற்கு வங்காளம்- வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும்-கேபுபாராவிற்கும் (வங்கதேசம்) இடையே இன்று பிற்பகல் கரையை கடக்க கூடும்.
எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.31 முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று (29-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (30-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications