Cyclone Ditwah: ஆட்டத்தை ஆரம்பித்த டிட்வா.. இரவு முழுக்க 15 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. புது வார்னிங்
சென்னை: வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் டிட்வா புயல் மெல்லத் தமிழகத்தை நோக்கி வரும் சூழலில், பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை கொட்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளைய தினம் ஏற்கனவே பல மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போதே மழை ஆரம்பித்துவிட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி வருகிறது. இந்த புயல் இன்று காலை இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. அதன் பிறகு இது மெல்லத் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஆட்டம் ஆரம்பம்
இதன் காரணமாக நாளைய தினம் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இன்றே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எங்கெல்லாம் மழை
இரவு 10 மணி வரை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. அதேபோல தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. கனமழை இரவு முழுக்க பெய்யும் என்பதால் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது சரியாக இருக்கும்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "நாளைய தினம் வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
கனமழை கொட்டும்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையிலும் மழை இருக்கு
ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டு இருந்தது












Click it and Unblock the Notifications