"2015 பெருமழைக்கு பிறகு இதுதான் மோசம்.." சென்னையில் மழை எப்போது குறையும்? வெதர்மேன் பரபர விளக்கம்
சென்னை: சென்னையில் கனமழை கொட்டி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன.. இந்த மழை எப்போது வரை தொடரும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் மெல்ல வடமேற்கே நகர்ந்து வருகிறது. நேற்றைய தினமே இந்த புயலால் மழை ஆரம்பித்துவிட்டது.

நேற்று காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், அதன் பிறகு மழை கொட்ட ஆரம்பித்தது. நேற்றிரவு சென்னையில் ஆரம்பித்த மழை இப்போது வரை விடாமல் கொட்டி வருகிறது.
கனமழை காரணமாகப் பொதுமக்கள் அனைவரும் வீடுகளையே முடங்கியுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் தங்குவோரை மீட்டு அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அமைச்சர் கேஎன் நேரு, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூட்டாகச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் இன்று இரவு வரை கனமழை தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாகக் குறைந்துவிடும். இந்த புயல் இப்போது மெதுவாக நகர்ந்து வருகிறது.
பொதுவாக நாம் எப்படி கார், பைக் ஓட்டும் போது ஒரு வளைவில் மெதுவாகச் செல்கிறோமோ.. அதேபோலத் தான் இதுவும்... புயல் நிலத்திற்கு அருகில் வந்து வளையும் போது மெதுவாகவே நகரும். இதன் காரணமாகவே மழை கொட்டி வருகிறது.
நேற்றிரவு ரேடார் எடுத்துப் பார்க்கும் போது என்ன நிலை இருந்ததோ.. கிட்டதட்ட இப்போது வரைக்கும் அதை நிலைதான் இருக்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் நழை பெய்து வருகிறது. சென்னை நகர்ப் பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக மழை பெய்து வருகிறது. எல்லா இடங்களிலும் 200, 300 மிமீ மழை பெய்துள்ளது. 2015க்கு பிறகு சென்னையில் பெய்த பெருமழை என்றால் நாம் இதைத் தான் சொல்ல வேண்டும்.
இந்தப் புயலைப் பொறுத்தவரை இது கரையைக் கடக்கும் போது நமக்குப் பெரியளவில் மழை இருக்காது. நெல்லூருக்கு செல்லும் வரை தான் மழை இருக்கும். இன்றிரவு நெல்லூரை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகே மழை குறையும்" என்றார்.












Click it and Unblock the Notifications