புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்.. டிச.,11ல் சென்னை வரும் மத்திய குழு.. 2 நாள் ஆய்வு! ஏன் முக்கியம்?
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (டிசம்பர் 12) தமிழகத்துக்கு மத்திய குழு வருகை தர உள்ளது. இந்த குழு 2 நாள் ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக சென்னை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சென்னையில் பாதிக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இதையடுத்து சென்னையில் மழை என்பது குறைந்த நிலையில் தற்போது படிப்படியாக சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தின் புயல் வெள்ள பாதிப்புக்கு ரூ.5,060 கோடி நிவாரணமாக அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதோடு திமுக எம்பிக்களும் நாடாளுமன்ற கூட்டத்தில் இதே கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். அதோடு தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையே தான் தமிழகத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் வந்து புயல் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையே தான் மத்திய அரசு சார்பில் புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் அடுத்தக்கட்டமாக தமிழகத்துக்கு மத்திய குழு வர உள்ளது. நாளை மறுநாள் டெல்லியில் இருந்து மத்திய குழு சென்னை வருகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இந்த குழு அதன்பிறகு சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். டிசம்பர் 11, டிசம்பர் 12 என 2 நாட்கள் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
அதன்பிறகு இந்த குழு டிசம்பர் 12ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்லும். அதன்பிறகு இந்த குழு புயல் பாதிப்பு குறித்து அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கும். அந்த அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் மத்திய அரசு அடுத்தக்கட்டமாக தமிழகத்துக்கு புயல், வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை வழங்கும். இதனால் மத்திய குழுவின் இந்த 2 நாள் ஆய்வு என்பது மிகவும் முக்கியமானதாகும்.












Click it and Unblock the Notifications