மிரட்டும் மிக்ஜாம் புயல்.. சென்னையில் நைட் ஆரம்பிக்கும் மழை.. விடிய விடிய கொட்டும்! வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மிக்ஜாம் புயல் உருவாகி இருக்கும் நிலையில், அங்கே நைட் ஆரம்பிக்கும் மழை விடிய விடியக் கொட்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அலர்ட் கொடுத்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று இப்போது மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் வரும் டிச. 4ஆம் தேதி இது தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த புயலைச் சமாளிக்கச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
மழை எங்கே: இந்த புயல் குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "மிக்ஜாம் புயல் இப்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது.. அது நாளை காலை செல்லும் பாதை என்பது சென்னைக்கு மிக அருகில் இருக்கும். அப்போது வானில் மிகவும் அடர்த்தியான மேகங்கள் உருவாகும். இன்று மாலை/ இரவு நேரங்களில் மழை தீவிரம் அடையும். இன்றிரவு மற்றும் நாளை காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் தான் அனைவரது கவனமும் இருக்கும்.
அந்த நேரத்தில் தீவிரமான மழை பெய்யக்கூடும். பலவீனமான புயல் என்றால் அது கரையைக் கடக்கும் இடம் முக்கியம் இல்லை.. மாறாக அது செல்லும் பாதை மற்றும் அது நகரும் வேகம் தான் முக்கியம். வட தமிழக கடற்கரைக்கு அருகில் செல்லும்போது, அது அதிக நேரம் அங்கே இருந்தால் தீவிர மழை கிடைக்கும். அங்கே நகராமல் இருந்தால் அது மழையின் அளவை அதிகரிக்கவே செய்யும்.
கடந்த கால புயல்கள்: வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும் போது மிக்ஜாம் புயலானது 1976 நவம்பர் புயல், 1985 நவம்பர் புயல், 1996 ஜூன் புயல், 2005 அக்டோபர் புயல், 2010 லைலா புயல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த கால தரவுகளை எடுத்துப் பார்த்தால் இந்த ரூட்டில் செல்லும் புயல்கள் எப்போதும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் கனமழையைக் கொடுக்கும்.
இந்த புயல்களில் எதுவும் சென்னை அருகே கரையைக் கடக்கவில்லை. அனைத்தும் ஆந்திராவில் தான் கரையைக் கடந்துள்ளது. 1976இல் ஏற்பட்ட புயல் கடலிலேயே இருந்துவிட்டது. எனவே, தற்போது இருக்கும் டேட்டாவை வைத்துப் பார்க்கும் கனமழை கண்டிப்பாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றிரவு ஆரம்பிக்கும் மழை நாளை காலை வரை கொட்டும். எனவே, தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். மொபைல்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்..
மாலை ஆரம்பிக்கும் மழை: இன்று மாலை எந்தளவுக்கு மழை பெய்கிறது என்பதை வைத்து என்ன செய்யலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். அதேநேரம் இது அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கை இல்லை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பாலோ செய்யுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications