மிக்ஜாம்: போர்க்கால வேகத்தில் மீட்பு, நிவாரணப் பணிகள்- கரம் கோர்ப்போம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு இடங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கின்றன என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் (ட்விட்டர்) நள்ளிரவில் பதிவிட்டுள்ளார்.
மிக்ஜாம் மீட்பு பணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு, நிவாரணப் பணிகள் ஆகியவை தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.
இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும்.
கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!
அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்!
அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.
— M.K.Stalin (@mkstalin) December 4, 2023
2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.
முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு… pic.twitter.com/QBIHxuR7uP
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவு 11 மணிகு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கவும் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கும் போது உதவ வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications