மிக்ஜாம் புயல்: சென்னையை மிச்சம் வெக்காம போகாது போலயே! வெதர்மேன் போட்ட பரபரப்பு ட்வீட்
சென்னை: வங்கக் கடலில் இன்று உருவாகவுள்ள மிக்ஜாம் புயல் நாளை முழுவதும் மழையைத் தரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: 24 மணி நேரத்தில் உருவாகும் மிக்ஜாம் புயலுக்கான பாதை தேர்வு செய்தாகிவிட்டது. இந்த பாதையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை. சென்னைக்கு அருகில் புயல் வரும்.
அப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடர்ந்த மேகக் கூட்டங்கள் இருக்கும். இது நாள் முழுவதும் மழையை தரும். மேற்கொண்ட மாவட்டங்களில் மிக மிக கழை முதல் அதி கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளது. இதற்குத்தான் காத்திருந்தோம். இப்போது இநத் தருணம் வந்துவிட்டது.

இது போல் அதீத மழையை நான் அரிதாகத்தான் கணித்துள்ளேன். உதாரணமாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 15, 16 தேதிகள், அதே ஆண்டு டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகள், அடுத்த ஆண்டு டிசம்பர் 11, 12, தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில்தான் அதீத கனமழை குறித்து கணித்துள்ளேன்.
அதீத கனமழை என்றால் உடனே 2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது போல் வெள்ளம் ஏற்படுமா என அச்சம் வேண்டாம். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை அதாவது 200மி.மீ. மழை வரை கூட பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்பான கூட்டத்தில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் புயல் என வந்தால் அது கரையை கடப்பதை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அது வடதமிழகத்தை ஒட்டிய பாதையில் வந்து அதன்பிறகு தான் தெற்கு ஆந்திராவுக்கு செல்கிறது. வடதமிழகத்தின் அருகேயே போய் ஆந்திராவுக்கு நகர்ந்த புயல்களின் வரலாற்றை பார்க்கும் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதை பார்த்துள்ளோம்.
4ஆம் தேதி அன்று புயலின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதி அடர்ந்த மேகங்களாக இருக்கும். அந்த மேகங்கள் சென்னை அல்லது திருவள்ளூர் பகுதிகளில் விழுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சாதாரணமாக 100 முதல் 150 மி.மீ. மழை பெய்யும், அதற்கு மேல் பெய்ய வாய்ப்புள்ளது என அமைச்சர்கள் கலந்து கொண்ட புயல் முன்னெச்சரிக்கை கூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் வந்த இரு புயல்களும் ஓமன் பக்கத்திலும் வங்கதேசம் பக்கத்திலும் சென்றுவிட்டது. தமிழகத்தை நெருங்கி வரும் முதல் புயலாக இந்த மிக்ஜாமை பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை முக்கியமான கால அளவாக பார்க்க வேண்டும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications