குமரிக்கடலில் சூறாவளி.. பொங்குது அரபிக்கடல்.. மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: சென்னை வானிலை மையம் வரும் 18ம் தேதிவரை மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு பிரத்யேகமான அறிவிப்பு மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்?
2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "இன்று 13ம் தேதி தேனி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறியிருந்தது.

பெருத்த மழை: இந்நிலையில், வரும் 18ம் தேதி வரை தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, நாளை 14, நாளை மறுநாள் 15 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 18-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
சென்னை மழை: சென்னை, புறநகர் பகுதிகளில் இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறியிருக்கிறது.
தற்போது மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். ஆனால், வரும் ஜூன் 18-ம் தேதி வரையிலும், ஒரு வாரத்துக்கு பெரும்பாலான இடங்களில், கனமழைக்கு வாய்ப்பில்லை. சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும்.
மீனவர்கள்: மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோரம், வடக்கு அந்தமான் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும், 16ம் தேதி மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக கடலோரப் பகுதிகளில், மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால், 16ம் தேதி மீனவர்களுக்கு கடலில் செல்ல தடை விதித்திருக்கிறது வானிலை மையம்.
பருவமழை: இதனிடையே, தென்மேற்கு பருவமழை, கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது.. எனவே இனிவரும் நாட்களில் வட மாநிலங்களில் பருவமழை கொட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications