டிச.20ல் புயல் சின்னம்! மீண்டும் ரேடாரில் கடலூர், புதுவை, திருவண்ணாமலை? டெல்டா வெதர்மேன் வார்னிங்!
சென்னை: டிசம்பர் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் , டிசம்பர் மாதம் வட கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பொழிவை கொடுக்கும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர வானிலை அறிக்கையை பார்க்கலாம்.

1. டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும்.
இயல்பிற்கு மிஞ்சிய (Large excess rains) மழை!
==> வடகடலோரம், டெல்டா மாவட்டங்களான #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம், #புதுச்சேரி, #கடலூர், #மயிலாடுதுறை, #காரைக்கால், #நாகப்பட்டிணம், #திருவாரூர், #காரைக்கால், #தஞ்சாவூர் மாவட்டங்களில் இயல்பிற்கு மிக எஞ்சிய மழை பதிவாக கூடும். 24 மணி நேரத்தில் அதித கனமழை வாய்ப்பும், குறுகிய கால பெருமழை வாய்ப்பும் தொடர்கிறது.
இயல்பிற்கு அதிக (Excess rains) மழை!
==> கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களான #இராணிப்பேட்டை #வேலூர், #திருவண்ணாமலை, #கள்ளக்குறிச்சி, #பெரம்பலூர், #அரியலூர், #திருச்சி மற்றும் கடலோர மாவட்டங்களான #புதுக்கோட்டை, #இராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழை வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாக கூடும்.
2. டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய கூடும்.
3. இதுவரை தமிழகம் மூன்று சுற்று மழையை பெற்றுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மேலும் மூன்று சுற்று வடகிழக்கு பருவமழை எதிர்ப்பார்க்கலாம்.
4. நான்காவது சுற்று பருவமழை டிசம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீடிக்கக் கூடும். நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி/ தாழ்வு மண்டலம் உருவாகி நான்காவது சுற்று மழையை கொடுக்கும்.
5. டெல்டா & வடகடலோர மாவட்டங்கள் டிசம்பர் 11ம் தேதி இரவு முதல் 16ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பிரதானமாக மழை பெறக் கூடும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த சுற்றில் மழை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. டிசம்பர் 20ம் தேதியை ஒட்டி தெற்கு வங்கக் கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகரும், இதன் காரணமாக ஐந்தாம் சுற்று பருவமழை டிசம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை எதிர்ப்பார்க்கலாம்.
7.ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து மழையை கொடுக்கும் நிகழ்வுகள் உள்ளன. தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் நிரம்பும் தருணத்தில் இருப்பதாலும், மண்ணில் ஈரப்பதம் வெகுவாக அதிகரித்து இருப்பதாலும் வரக் கூடிய 4 வது, 5ம் சுற்றுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குறிப்பாக #FENGAL பாதித்த #புதுச்சேரி, #கடலூர், #விழுப்புரம், #கள்ளக்குறிச்சி, #திருவண்ணாமலை மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை!
8. டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கதிர் பரியும் சூழலில் இருப்பதால் இனி வரக்கூடிய நாட்களில் மிககனமழை, அதித கனமழை வேளாண்மை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
9. குறுகிய கால பெருமழை நிலச்சரிவு, பெருவெள்ளம் மற்றும் மக்களின் பொருளாதாரம் போன்ற வற்றையும் பாதிப்படைய செய்யும் சூழல் நிலவுகிறது.
10. இப்பதிவு மக்களை அச்சப்படுத்த பதிவிடவில்லை, பருவமழையின் வரக்கூடிய சுற்றுகளில் மிகுந்த கவனம் தேவை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பகிரப்படுகிறது. தொடர்ந்து அறிக்கைகளை பார்த்து பயன்பெறுங்கள். இவ்வாறு ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications