வெந்த புண்ணில் வேலை பாய்ச்சக்கூடாது! நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு.. ஆர்எஸ் பாரதி பதிலடி
சென்னை: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, தமிழக அரசு மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி திடீரென மழை தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்குள் புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.12,659 கோடி நிதியை நிவாரணமாக ஒதுக்க வேண்டும் என்றும், உடனடியாக ரூ.2000 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அதில், "கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது. டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. 5 நாட்களுக்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்தது. மட்டுமல்லாது 3 மணி நேரத்திற்கு ஒருமுறையும் வானிலை எச்சரிக்கை கொடுத்தது. எனவே மழை முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்று கூற வேண்டாம்.
இஞ்ச் பை இஞ்ச் எவ்வளவு மழை வரும் என்று கணிக்க முடியாது. 2015 வெள்ளத்தில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? 4000 கோடி நிதியில் இருந்து எவ்வளவு வசதி செய்திருக்கிறீர்கள். அம்பத்தூரை காப்பாற்ற என்ன வசதி செய்திருக்கிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்திருக்கிறார். அதாவது, "நிர்மலா சீதாராமன் சார்ந்து இருக்கக்கூடிய கட்சி எந்த காலத்திலும் உண்மையை பேசியது கிடையாது. எனவே தற்போது அவர் பேசியிருப்பது பல பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் எச்சரிக்கை வழங்கப்பட்டு விட்டது என்று மத்திய அமைச்சர் கூறுகிறார்.
இதனை நாங்கள் மறுத்து இருந்தாலும் கூட ஊடகங்கள் வெளியிட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை. எனவே இது பச்சை பொய். தமிழ்நாட்டை சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நிதியளிக்க முன் வந்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது வருத்தம் அளிக்கிறது. மட்டுமல்லாது அவர் இவ்வாறு பேசுவது வந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதை போல இருக்கிறது.
அரசியல் பேசுவதற்கு இது நேரமில்லை. தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்கிறார்கள். குஜராத்திற்கு ஓடோடி சென்று கேட்காமலேயே நிதி உதவி செய்யக்கூடிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு கேட்ட பின்னரும் போதுமான நிதி வழங்காததற்கான காரணம் என்ன? தமிழ்நாடு இந்தியாவினுடைய மேப்பில் தானே இருக்கிறது ஒருவேளை தமிழ்நாடு என்பதே இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் செயல்படுகிறார்களா என்பது தெரியவில்லை.
இந்த நான்காயிரம் கோடி என்ன ஆனது என்பதை மனசாட்சி உள்ளவர்கள் அறிவார்கள். இந்தத் தொகை செலவிடாமல் இருந்திருந்தால் இன்று சென்னை காப்பாற்றப்பட்டிருக்காது. இது தொடர்பாக வெளிப்படையான அறிக்கை கொடுப்பதற்கு கூட அரசு தயாராக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications