சென்னையில் ஏசி வாங்குறதும் போதும்.. அதை மாட்டுறதும் போதும்.. "அனலடிக்கும் அபார்ட்மென்ட்கள்"
சென்னை: ஒரு வீட்டுக்கு பல ஏசிகளை மாட்டுவதால் சென்னை அடுக்குமாடி குடியிருப்புகளில் அவுட்டோர் யூனிட்டை வைக்க இடமில்லாமல் பக்கத்து வீட்டின் பிரதான கதவு அருகே வைப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் 106, 107 , 108 டிகிர வரை தகிப்பதால் வசதி இருப்போர் டாய்லெட்டில் கூட ஏசியை புதிதாக வாங்கி மாட்டிக் கொள்ளும் அளவுக்கு எல்லா இடங்களில் அனல் கக்குகிறது.

பொதுவாக எல்லார் வீடுகளிலும் படுக்கை அறைகளில் ஏசி இருக்கும். இரு படுக்கை அறைகளை கொண்டவர்கள் பயன்பாடு, தேவைக்கேற்ப இரு ஏசிகளை பயன்படுத்துவர். அது போல் சிலர் ஹாலில் கூட ஏசியை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்த முறை வீட்டின் எந்த இடத்திற்கு சென்றால் நெருப்பை மேலே உமிழ்வது போல் வெப்பம் இருப்பதால் சென்னையில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடுதல் ஏசிக்களை வாங்கி மாட்டுகிறார்கள். ஒரு அபார்ட்மென்டில் பெரும்பாலானோர் ஏசியை வாங்கி மாட்டுவதால் ஏசியின் அவுட்டோர் யூனிட் வைப்பதற்கு இடமே இல்லாத நிலை ஏற்படுகிறது.
இதனால் பக்கத்து வீட்டுக்காரரின் பிரதான கதவுக்கு அருகில் கைக்கு எட்டும் தூரத்திலேயே மாட்டிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் ஏசி போட்டுக் கொண்டு கூலிங்காக இருந்து வரும் நிலையில் அவுட்டோர் யூனிட் மாட்டப்பட்ட வீட்டுக்குள் அனல் அடிக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் அபார்மென்ட் நிர்வாகத்தினர் தலையே சுற்றுவதாக தெரிவிக்கிறார்கள். சிலரிடம் வம்படியாக சொல்லி அந்த அவுட்டோர் யூனிட்டை எடுக்க சொல்கிறார்கள். இது போல் அடுத்தவர் வீட்டு கதவுக்கு அருகே அவுட்டோர் யூனிட் போடுபவர்கள் அந்த வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் எங்கே இப்போது வரப் போகிறார்கள் என கருதி ஆள் இல்லாததால் அவுட்டோரை ஃபிக்ஸ் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தாயகம் திரும்பும் போதுதான் பிரச்சினையே எழுகிறது. ஆட்சேபனைகளும் வருகின்றன. அது போல் அடுத்த வீட்டு சுவற்றில் ஏசி அவுட்டோர் யூனிட்டை மாட்டுவோர் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து தடையில்லா சான்றிதழை பெற்று குடியிருப்பு நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டுதான் ஏசியை பொருத்த வேண்டும் என்ற விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
விருகம்பாக்கத்தில் உள்ள முன்னணி கட்டுமான நிறுவனத்தின் குடியிருப்பில் 384 வீடுகள் உள்ளன. இங்கு அவுட்டோர் யூனிட்டை பொருத்துவதற்கான இடவசதியே இல்லாத நிலை உள்ளது. மொட்டை மாடியில் அவுட்டோர் யூனிட்டை வைக்க சில குடியிருப்புகளில் அனுமதி இல்லை. அவுட்டோரை சர்வீஸிங் செய்வது சவாலாக இருப்பதால் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
6 ஆவது 7 ஆவது மாடிகளில் வசிப்போருக்கு அவுட்டோர் யூனிட்டை மொட்டை மாடிகளில் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. சில இடங்களில் ஜன்னல்களின் சன்ஷேடுகளில் எந்த ராடும் அடிக்காமல் ஏசி அவுட்டோர் யூனிட் வைக்கப்படுவதால் கட்டடத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்பட கூடும்.
ஒரு வீட்டில் 3 ஏசிக்களுக்கு மேல் இருப்பதால் வோல்டேஜை அதிகரிப்பதிலும் சிக்கல் உள்ளது. இதனால் புதிய டிரான்ஸ்பார்மரை நிறுவ மின்சார வாரியத்திற்கு நிறைய கோரிக்கைகள் வருகின்றன. குடியிருப்புவாசிகளை ஏசி இயந்திரம் பயன்படுத்த வேண்டாம் என அபார்ட்மென்ட் நிர்வாகத்தினரால் வலியுறுத்த முடியாது. இதனால் டிரான்ஸ்பார்மரின் லோடை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
பெரிய அபார்ட்மென்ட்களில் ஏசி இயந்திரத்தின் அவுட்டோரை பொருத்த ஏணி தேவைப்படுகிறது. ஏணி இல்லாத பட்சத்தில் கயிறை கட்டிக் கொண்டு இறங்குவது ஆபத்தை ஏற்படுத்தும். பழைய காலத்து வீடுகளில் ஸ்பிலிட் ஏசியை பொருத்தும் வகையில் கட்டுமானம் இல்லாத நிலை உள்ளதாகவே ஏசி பொருத்தும் தொழில் நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் மொட்டை மாடிகளில் அவுட்டோர் யூனிட்டை வைப்பதால் நீண்ட நீளமான காப்பர் வயர்கள் தேவைப்படுகிறது. இது பிளாட் ஓனருக்கு செலவை இழுத்து விடுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications