ஆழ்வார்பேட்டை சாலையில் தோன்றிய திடீர் பள்ளம்.. அச்சமடைந்த பொதுமக்கள்.. களத்தில் குதித்த மாநகராட்சி
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டி வருகிறது. மழை காரணமாக ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் 5 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இங்குள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடி மற்றும் மின்னலுடன் கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் அதீத மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மின்னல் காரணமாக இரவு நேரம் பகல்போலக் காட்சியளித்தது. அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 6.1 செ.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 5.3 செமீட்டரும், நந்தனத்தில் 4.7 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 4.2 செ.மீ மழையும் பெய்தது.
சென்னையில் அதிகாலையில் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மழை காரணமாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி கடல்போலக் காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், பிரதான சாலையான ஆழ்வார்பேட்டையையும், ராயப்பேட்டையையும் இணைக்கக் கூடிய இணைப்பு சாலையான டிடிகே சாலையில் சுமார் 5 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுயத்து, உடனடியாக அந்தப் பள்ளத்தை கான்கிரீட் கலவை கொண்டு மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்வார்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி செல்லக்கூடிய சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகின்றன.
மேம்பாலத்திற்கு அருகில் உள்ள அம்புஜம்மாள் சாலை வழியாக சீனிவாசன் தெருவுக்குச் சென்று டிடிகே சாலையில் மீண்டும் இணைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளம் காரணமாக அலுவலகத்திற்குச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications