சென்னை மக்களே இனி குடையை ரெடியா வச்சுக்கோங்க.. மற்ற மாவட்டங்களுக்கு மழை இருக்கா? தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வட தமிழக பகுதிகளுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் பகுதிகளுக்கு தினமும் இரவு அல்லது அதிகாலை இனிமேல் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மீண்டும் கோடைக்காலம் தொடங்கிவிட்டதோ என்று நினைக்கும் வகையில் வெப்பம் அனலாக தகிக்கிறது. மழை எப்போது பெய்யும் என்று மக்கள் நினைத்த நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. அதிகாலை வரை மழை தொடர்ந்ததால் சென்னை நகரம் குளிர்ந்தது. தற்போது இந்த மழையானது மேலும் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் ஜில் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது:- தமிழகத்தில் வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெப்பம் தணிந்து மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வட தமிழக பகுதிகளுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.
தெற்கு மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்பம் வாட்டி வதைக்கும். நாளை முதல் தமிழகத்தின் பிறப் பகுதிகளுக்கும் மழை பெய்யும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் பகுதிகளுக்கு தினமும் இரவு அல்லது அதிகாலை இனிமேல் மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிககளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications