சென்னைக்கு வந்த முதல் பருவ மழை.. அரசும் மக்களும் அறிய வேண்டிய கசப்பான உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முதல் மழை சில நாட்களுக்கு முன்பு பெய்தது. அப்போது ​​கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காட்சிகள் உண்மையில் மீண்டும் மீண்டும் நம் கண் முன்னே வந்து போனது என்னவோ நிஜம் தான். ஆனால் மக்களிடையே நிலவிய பீதி மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்தமாக நிர்வாக ரீதியாக இந்த முறை அதிரடியான முயற்சி மேற்கொண்டது.

எல்லாமே சூப்பர் சிக்சர் என்று சொல்ல முடியாது என்றாலும், ஓரளவு பணிகளை ஒருங்கிணைத்து செய்து, மழைக்கு முன் தயாராக இருந்தது. அதேநேரம் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே மழை நின்றுவிட்டது. இந்த காரணங்களால் சென்னை மாநகரின் பல பகுதிகள் ஒரே நாளில் பாதிப்பில் இருந்து மீண்டன.

weather chennai chennai rain

கடந்த 2015ல் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஒவ்வொரு டிசம்பரும் சென்னைக்கு ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. எத்தனை புயல்கள், எத்தனை மழைகள் பெய்தது என்று எண்ணவே முடியாது. மிகப்பெரிய பாதிப்பு என்பது 2015க்கு பிறகு 2023ல் தான் சென்னையில் நேரடியாக ஏற்பட்டது. சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்தது.

சென்னையில் இதேபோன்று அக்டோபர் , நவம்பரில் பெய்த மழையால் ஏற்கனவே ஏரி, குளங்கள் நிரம்பி இருந்த நேரத்தில் திடீரென மிக்ஜாம் புயலால் பெய்த 36 மணி நேர மழை, சென்னையில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் யாருக்குமே அதிகப்படியான வெள்ளம் வரப்போகிறது. தொடர்ந்து 36 மணி நேரம் மழை பெய்ய போகிறது. அதுவும் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு கொட்டி தீர்க்க போகிறது என்று தெரியாது.

வழக்கமான வானிலை எச்சரிக்கை போல் தான் இருந்தது. இதனால் மக்கள் மட்டுமல்ல, அரசும் மிகப்பெரிய அளவில் கடந்த ஆண்டு தயாராகவில்லை.. கால்வாய்கள் பல இடங்களில் வேலை முடியவில்லை.. சில கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை.. அரசு செய்து வைத்திருந்த வேலைகளையும் மழையையும் ஒப்பிடும் போது, பெரிய இடைவெளி கடந்த ஆண்டு இருந்தது என்பது கசப்பான மற்றும் மறுக்க முடியாத உண்மை. மக்களுமே மழை இப்படி இருக்கும் என தெரியாததால், முன்னெச்சரிக்கையுடன் இல்லை.. இதனால் கார்கள், வீடுகள், பொருட்கள் என பலவற்றை பறிகொடுத்தனர்.

பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பெரும்பாக்கம், காரப்பாக்கம், துரைப்பாக்கம், திருவேற்காடு, பல்லாவரம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம் , முடிச்சூர், வரதராஜபுரம், அனகாபுத்தூர் மற்றும் வடசென்னையில் வியாசர்பாடி, கொளத்தூர், கொரட்டூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவிக நகர் என பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆனது.

weather chennai chennai rain

ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை, மிக்ஜாம் புயலில் இருந்து கற்ற பாடங்களால், அரசாங்கம் பேரிடர் மேலாண்மைக்குத் தயாராகி, வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்கூட்டியே முறையாக திட்டமிட்டது. சுமார் 300 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டது. 98 சமுதாய சமையலறைகள் மூலம் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உணவு விநியோகிக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள மேலாண்மை பணிகளை விடிய விடிய நேரில் சென்று ஆய்வு செய்து துரிதப்படுத்தினர்.

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் 24 மணி நேரமும் விடாமுயற்சியுடன், கனரக பம்புகள் மூலம் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றினர். அத்துடன் குப்பை மற்றும் கழிவுநீரை உடனடியாக அகற்றினர். இந்த பணிகளை மேற்கொள்ளும் ஏஜென்சிகளுக்கு இடையே ஒருங்கிணைக்க நோடல் அதிகாரிகளை நியமித்தது பணியை கண்காணிக்க அரசுக்கு உதவியது.

சரி, மழைக்கு வருவோம். அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் சராசரியாக 13 செ.மீ-14 செ.மீ மழை பதிவாகியிருந்தாலும், நகரின் சில பகுதிகள் மற்றும் தென்சென்னையில் சில பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. சென்னைக்கு வெளியே சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ மழையும், ரெட் ஹில்ஸ் 28 சென்டிமீட்டரும், ஆவடியில் 25 செ.மீ மழையும் பெய்துள்ளது.

இரண்டு நாட்களுக்கும் மேலாக கணிக்கப்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு மாறாக, சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ஆனால் சென்னை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு மாறாக அக்டோபர் 16 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதன் பாதையை மாற்றி வலுவிழந்து ஆந்திராவை நோக்கி சென்றது. இதனால் சென்னையில் எதிர்பார்த்தபடி மழை இல்லை.

weather chennai chennai rain

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு கூடுதல் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரைக்கு அருகே வரும் போது மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தான் எச்சரிக்கப்பட்டது" என்றார். இதுபற்றி ஐஐடி பாம்பேயின் பேராசிரியர் ரகு முர்துகுடே இதுபற்றி கூறுகையில், "வானிலை தொடர்பாக பிராந்திய மொழிகளில் விழிப்புணர்வுகளை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது தான் மக்கள் சரியாக இதனை புரிந்து கொள்வார்கள்" என்றார்.

சென்னையை பொறுத்தவரை இந்த முறை கொரட்டூரில் உள்ள டிஎன்ஹெச்சி காலனி, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனி, கொளத்தூரில் உள்ள ஜி.கே.எம். காலனி, கொரட்டூர் மற்றும் ரெட் ஹில்ஸ் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களாகும், அங்கு மழை குறைந்த பின்னர் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். கொரட்டூரில் படகுகளில் மக்களை மீட்க வேண்டியிருந்தது.

chennai chennai rain

இதேபோல் ரெட் ஹில்ஸில் உள்ள குமரன் காலனியில் வசிப்பவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க ட்ரோன்கள் அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தீவிரமான அரசின் நடவடிக்கை காரணமாக அக்டோபர் 16ஆம் தேதி காலையிலேயே தென் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் வேகமாக வடிந்தது. வடிகால்கள் தூர்வாரப்பட்டதால் சில இடங்களில் வெள்ள பாதிப்பு பெரிதாக ஏற்படவில்லை.. அதேநேரம் நீர் வடிகால் தூர் வாரப்படாததால், காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் புயலால் இரண்டு நாட்கள் வரை தண்ணீர் தேங்கி நின்றது.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீரில் மூழ்கும் ஓஎம்ஆர் சாலையை சுற்றியுள்ள பகுதிகள் இந்த முறையும் சற்று பாதிக்கப்பட்டன. ஆனால் வேகமாக நீர் வடிந்ததால் தப்பினர்.. ஒக்கியும் மடுவு மற்றும் எல்காட் SEZக்கு எதிரே உள்ள சதுப்பு நிலத்தை சுத்தம் செய்யாத காரணத்தால் மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் கவலைகளை வெளிப்படுத்தினார்கள். கடந்த ஆண்டு கற்ற பாடத்தால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை

weather chennai chennai rain

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, மழைநீர் வடிகால்கள் பரவலாக தூர்வாரப்பட்டது, 785 கிமீ தூரத்திற்கு புதிய வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த முறை மாற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த தணிகாசலம் நகர் வடிகால் புனரமைப்பு மூலம் மாறியது. இதேபோல் கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்னைக்கும் புனரமைப்பு பணிகளால் தீர்வு கிடைத்துள்ளது. சென்னை ஈசிஆரிலும் மழைநீர் வடிகால்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தின.

இருப்பினும், மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டங்களின் பணிகள் பல இடங்களில் தாமதமாகி வருகின்றன. அதேபோல் காணாமல் போன வடிகால்கள் மற்றும் முழுமையடையாத நீர் வழிப்பாதை இணைப்புகள், வடிகால் மற்றும் நீர் வழித்தடங்களுக்கு இடையேயான இணைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சிக்கல் இருந்தது.

குறிப்பாக சொல்வது என்றால், சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் ரோடு வழியாக நாராயணபுரம் ஏரியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைக்கும் கால்வாய் அமைக்கும் பணிக்கு, நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதே போல் கே.கே.நகரில் உள்ள வேம்புலியம்மன் கோயில் தெரு உட்பட கிட்டத்தட்ட 50 இடங்களில் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் எனில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள், இந்த மழையில் பெரும் சவாலாக உள்ளது. இதனால் தான் தென் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வடிகால்களில் குப்பைகள் தேங்கியது. சென்னையில் உள்ள பல்வேறு மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிள் காரணமாக அந்த பகுதியை சுற்றியுள்ள 22 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

weather chennai chennai rain

உதாரணமாக, மில்லர்ஸ் ரோடு மற்றும் புரசைவாக்கம் ஹை ரோட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 19 பம்புகளை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அப்படி மோட்டார் வைத்தும் சில நாட்களுக்குப் பிறகுதான் தண்ணீர் அங்கு வடிந்தது. இதேபோல் பல ஆண்டுகளாக மழை பெய்தாலே வெள்ளத்தில் மூழ்கி வரும் புளியந்தோப்பு, பட்டாளம், பெரம்பூர், சூளை, வியாசர்பாடி ஆகிய பகுதிகள் அக்டோபர் 16-ம் தேதி மழை நின்ற பிறகும் வெள்ளத்தில் மிதந்தன.

வெள்ளத்தால் எப்போதுமே பாதிக்கப்படும் மற்றொரு பகுதியான மடிப்பாக்கத்தில் இந்த முறை நிறைய பயணிகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் பணிகள் முழுமை அடையாத காரணத்தால் பாதிப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக குபேரன் நகர் விரிவாக்கம், ராம் நகர் தெற்கு விரிவாக்கம், எல்ஐசி நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில சாலை பணிகள் இன்னும் முடியவில்லை.. அதேபோல் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழிப் பாதைகளுக்கு இணைப்பும் இல்லை.

chennai chennai rain

மடிப்பாக்கம் வெள்ளத்தில் தப்பிக்க வேண்டும் என்றால், வரும் நாட்களில் கீழ்கட்டளை முதல் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி வரை உள்ள கால்வாய் வழித்தடத்தை மேம்படுத்தினால் தான் சாத்தியம். பல இடங்களில் அங்கு தடுப்பு சுவர் இல்லை.. அதேபோல் நாராயணபுரம் ஏரியை ஒட்டி உள்ள இரண்டு அடுக்குமாடி ஆக்கிரமிப்புகள் வெள்ள பாதிப்பை கடுமையாக்கி வருகின்றன. ஏரியை ஒட்டியுள்ள அந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் வெள்ள பாதிப்பு அங்கு ஏற்படாது என்கிறார்கள் சுண்ணாம்பு கொளத்தூர் மக்கள்.

அதேநேரம் கடந்த ஆண்டை விட, மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் சாலைகள் சீரமைக்கப்பட்டதால், மடிப்பாக்கத்தில் தண்ணீர் தேக்கம் குறைவாவே இருந்தது. சாலை பணிகள் முடியாத ஒரு சில தெருக்களில் பாதிப்புகள் இருந்தது. வடசென்னையில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை அருகே, தண்டவாளத்துக்கு அடியில் லைன் பிளாக் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளதால், வெள்ளப்பெருக்கை தடுக்கும் பணி ஓரிரு வாரங்களில் முடிவடையும் என மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி கூறினார்.

weather chennai chennai rain

பருவமழையை எதிர்கொள்ள அரசு 3 மாதங்களாக தயாராகி வந்தது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி. திருப்புகழ் தலைமையிலான குழு சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைப்பது தொடர்பாக அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவில் முடிக்க அரசு தீவிரமாக வேலை செய்து வருகிறது.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கூறும்போது, ​​"கடந்த ஆண்டு எதிர்கொண்ட பிரச்னைகளை லிஸ்ட் எடுத்தோம். அதன்பின்னர் வரிசையாக சரி செய்ய முயற்சித்தோம். கடந்த ஜூலையில் இருந்து பல இடங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடங்கினோம். தண்ணீர் அதிகம் தேங்கும் 35 இடங்களை கண்டறிந்து திட்டங்களை உருவாக்கினோம். வெள்ளம் ஏற்படும் இடங்களில் 100-ஹெச்பி மோட்டார்களை நிறுவினோம்.

weather chennai chennai rain

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைப்புக் குழுவினையும் அமைத்துள்ளோம். கால்வாய்களில் தேங்கும் குப்பைகளை அகற்றவும், கால்வாய்களில் மணலை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளையும் நாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு பெய்த மழையின் போது நாங்கள் சிக்கல்களை எதிர்கொண்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்

சென்னை கழிவு நீர் வாரியம் அக்டோபர் 15 அன்று மட்டும் கிட்டத்தட்ட 953 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றி உள்ளது. ஓட்டேரி நுால், வீரங்கல் ஓடை, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட 29 சிறிய கால்வாய்களை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் சென்னையில் வெள்ள பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்கிறார்கள். சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நீண்ட கால வெள்ள மேலாண்மைத் திட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் நீர்நிலைகள் மற்றும் நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சணை பார்க்காமல் ஆய்வு செய்து, இரும்பு கரம் கொண்டு அகற்றினால் தான் சென்னை வெள்ள பிரச்சனைக்கு நிரந்த தீர்வாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+