ஒகேனக்கல் அருவிகளில் கொட்டுது வெள்ளம்.. குளிக்க, பரிசல் இயக்கத் தடை.. காவிரி கரையோரம் எச்சரிக்கை
சேலம்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருப்பதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,232 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியை கடந்தது. நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. நண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. ஆனால், மாலை 5 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் பிரதான அருவி, சினிபால்ஸ் அருவி, ஐவர் பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பாறைகள் படிப்படியாக மூழ்கத் தொடங்கியுள்ளன. அருவிகளில் குளித்து மகிழலாம் என்று சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வரத்தொடங்கினர். இந்த நிலையில் வெள்ள நீர் அதிகரித்த காரணத்தால் பரிசல் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டு, ஒகேனக்கல் பரிசல் துறை பூட்டப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. அணைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 10,232 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 64.80 அடியாகவும், நீர் இருப்பு 28.39 டிஎம்சியாகவும் இருந்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 45 நாட்களில் அணை நீர்மட்டம் 40 அடி குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து பெரு வெள்ளம் வந்தால் மட்டுமே அணை நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications