மிதக்கும் தென் தமிழகம்! நிற்கதியில் மக்கள்! அரசு பேருந்துகளில் இலவசமாக நிவாரணம் அனுப்பலாம்!
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் நிவாரண பொருட்களை கட்டணமில்லாமல் அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆரிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை டவுன் பகுதிகளுக்கு வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது.

அது போல் பல இடங்களில் சாலையானது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு அந்த பகுதியில் பள்ளமாக காட்சியளிக்கிறது. மழை நின்றாலும் இன்னும் வெள்ளம் வடிந்த பாடில்லை. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் மழை குறைந்து வெயில் வரத் தொடங்கியுள்ளது. ஆனாலும் சூழ்ந்த வெள்ளத்தால் துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், மளிகை சாமான் கடைகள், உள்ளிட்டவை நீரில் மூழ்கி பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.
இதற்காக அண்டை மாவட்டங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். பலர் களத்தில் நேரடியாக வந்து உதவி வருகிறார்கள். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நிவாரண உதவிகளை அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் 4 மாவட்ட மக்களுக்கு அனுப்ப விரும்புவோர் தங்களது நிவாரண பொருட்களை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் அனுப்பி வைக்கலாம். இவை அந்தந்த 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு செல்லும். அங்கிருந்து நிவாரணங்கள் பிரித்து அனுப்பப்படும்.
பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என யார் வேண்டுமானாலும் நிவாரண பொருட்களை அனுப்பி உதவலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications