"அய்யோ காப்பாத்துங்க.." சடசடனு வீடுகளுக்குள் நுழைந்த வெள்ளம்.. விடாத மழை.. கதறும் நெல்லை மக்கள்!
சென்னை: தென்தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாகத் திருநெல்வேலியில் பல இடங்களில் மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் இம்மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை வைத்துச் செய்து விட்டது. இடைவிடாமல் இரண்டு நாட்கள் பெய்த கனமழை சென்னையின் அனைத்து பகுதிகளையும் மூழ்கடித்தது.

முக்கிய பகுதிகளில் நீர் உடனடியாக வடிந்தாலும், மற்ற பகுதிகளில் நீர் வடிய சில நாட்கள் வரை ஆனது. இப்போது தான் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறது.
கனமழை: இதற்கிடையே இந்த கனமழை இப்போது தென்தமிழகம் பக்கம் சென்றுள்ளது. வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் பெருமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இப்போது குமரிக் கடல் பக்கம் நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது.
குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் கொஞ்சமும் கேப் விடாமல் தொடர் மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 190 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது மட்டுமின்றி ஊத்து எஸ்டேட்டில் 160 மிமீ, காக்காச்சியில் 150 மிமீ, மாஞ்சோலை 135 மிமீ மழைப் பதிவாகி இருக்கிறது. இன்று காலை முதலே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வைத்துச் செய்து வருகிறது.
புலம்பும் மக்கள்: நெல்லையில் கனமழை இடைவிடாமல் கொட்டும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகளிலும் கூட வெள்ளம் ஓடுகிறது. மேலும், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கண்ணீரில் புலம்புகின்றனர். மழை எப்போது நிற்கும், தண்ணீர் எப்போது வடியும் என்றே பொதுமக்கள் வேண்டி வருகிறார்கள்.
மேலும், இந்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் கொட்டும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சேர்வலாறு அணைகளில் உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கே அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொட்டிய கனமழை: இப்போதே தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டும் நிலையில், நாளையும் கூட இந்த கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கனமழை தொடரும்பட்சத்தில் பல பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், ஆபத்தான சூழலில் இருப்போரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்றைய தினம் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications