தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு படுத்தி எடுக்க போகுது வெப்பம்! வானிலை மையம் தந்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த சில காலம் குளிர் அதிகமாக இருந்தது. இப்போது குளிரும் குறைந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மெல்ல வெப்பம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழகத்தில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும் பெரியளவில் மழை பதிவாகவில்லை.

வெப்பம் எப்படி இருக்கு?
வெப்பத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 36.6° செல்சியஸாக உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 17.0° செல்சியஸாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2°-3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33°- 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29° - 35° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்
அடுத்து வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றும் நாளையும் (பிப்ரவரி 17, 18 நாட்களில்) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 19 முதல் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். பிப்ரவரி 22, 23 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழை சீசன் முடிந்துவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பம் மெல்ல அதிகரித்தே வருகிறது. கோடை காலத்தில் வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications