ஸ்கார்ப்பா? ரெயின்கோட்டா? நல்ல சீட்டா எடுத்துப் போடு! இன்று தமிழக வானிலை நிலவரம் எப்படி இருக்கும்?
சென்னை: பனியின் தாக்கத்திலிருந்து தமிழகம் மீண்டு வந்திருக்கும் நிலையில் வெயில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் எடுத்த எடுப்பிலேயே மக்களை வாட்டி வதைக்க வேண்டாம் என அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஜனவரியில் சில பகுதிகளில் உறைபனி கூட நிலவும். தற்போது பிப்ரவரி முடிந்திருக்கும் நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இரவில் கடுமையான பனிப்பொழிவும் பகலில் கடுமையான வெயிலும் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சராசரியாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கும் நிலையில் இது வழக்கத்தைவிட 1.34 டிகிரி செல்சியஸ் அதிகம் எனக் கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மார்ச் முதல் மே வரை வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென்மேற்கு இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பகலில் அதிக வெயிலும் இரவில் பனியின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. சென்னை கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெயில் இயல்பை விட சற்று குறைவாகவே இருந்தாலும்.வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிவிப்பு மையம் கணித்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சாரல் மழை பெய்யலாம். அதே நேரத்தில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றே கூறப்படுகிறது. தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையலாம் எனவும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33லிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
அரபிக் கடல் பகுதிகளில் குறிப்பாக பூமத்திய ரேகையை ஒட்டி வட இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் எனவும் கணித்திருக்கிறது. இதனால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று சில பகுதிகளில் மழையும் பெய்திருக்கிறது. அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் 0.2 மில்லி மீட்டர் முதல் 7.0 மில்லி மீட்டர் வரை பெய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications