அரபிக்கடல், வங்கக் கடலில் மாற்றம்.. ஒரே நேரத்தில் வளிமண்டலத்தில் 2 சுழற்சிகள்.. தமிழகத்தில் இன்று மழை
சென்னை: தமிழக பகுதிகளின் மீது நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நகர துவங்கியுள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட, 14 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் வளிமண்டலத்தில் இரு சுழற்சிகள் உள்ளதால், தமிழகத்தின் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய போவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளதாவது:

அரபிக்கடல்: "மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மட்டும் காணப்படுகிறது. இது, கிழக்கில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால், மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகர வாய்ப்புள்ளது.
இதே சமயத்தில், கேரள கடலோர பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி லட்சத்தீவு, மாலத்தீவு இடையே செல்ல வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரள பகுதிகளில் கனமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாவட்டங்கள்: நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை ஆகிய, 14 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆக., 17, 18ம் தேதியிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தமிழக தென்கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில், ஆக., 18 வரை மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்வதாக அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில், நாளையும், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் வருகிற 19ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications