குடையுடன் வெளியே போங்க.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்!
சென்னை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேபோல் கேரளாவில் இன்று முதல் படிப்படியாக மழை குறைய உள்ளதால், ஜூன் 19ஆம் தேதி முதல் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஜூன் 22ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதேபோல் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், படிப்படியாக மழை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் இன்று முதல் மழை குறையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications