வெளுக்கப் போகுது கனமழை.. சீரியஸாகும் வானிலை! டெல்டா மாவட்டங்கள் ரொம்ப கவனம்! மெட் கொடுத்த அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக இன்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தொடர வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையிலும் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. நகரின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இருந்து வந்த கடும் வெப்பம் சற்று குறையக்கூடும்.
இதற்கிடையே முக்கிய தகவலாக, தெற்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் இந்த வார இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே அந்தமான் பகுதிகளில் மழை செயல்பாடு அதிகரிக்கும். தற்போது அந்த சூழல் உருவாகி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கடுமையாக இருந்த நிலையில், தற்போது மழை பெய்ய தொடங்கியிருப்பது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications