அதி கனமழை.. சாலைகள் எங்கும் சகதி.. சிக்கிய பஸ்கள்.. நீலகிரிக்கு வராதீங்க.. கலெக்டர் வார்னிங்
நீலகிரி: அதிகனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையிலும் மேட்டுபாளையம் - குன்னூர் செல்ல கூடிய சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர் கனமழை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக அடுத்தடுத்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 9-ம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில்பாதை தண்டவாளத்தில் பல்வேறு இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலை ரயில் ரத்து: சில இடங்களில் ரயில்வே பாதைக்கு கீழ் உள்ள நிலப்பரப்பு முழுவதும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் புனரமைப்பு பணிகள் தாமதமாகி வந்தது.சுமார் ஒரு வார காலத்துக்கும் மேலாக ரயில்வே பணியாளர்கள் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கடந்த 18ஆம் தேதி வரை தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
பயணிகள் ஏமாற்றம்: இதனிடையே புதன்கிழமையன்று இரவு பெய்த அதிகனமழை காரணமாக மீண்டும் தண்டவாளத்தின் பல்வேறு இடங்களிலும் மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதனால் வருகிற 25ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இருப்பினும் மலை ரயிலில் பயணிக்க முடியாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சாலைகள் பாதிப்பு: நீலகிரியில் கன மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அருணா. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு பகுதியில் அரசு பேருந்து மீது மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சபனை பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்து மரங்கள் இருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய பேருந்து: இதனால் அந்த சாலை முழுவதும் சேற்றில் நிரம்பியது. அந்த வழியாக சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து இந்த சேற்றில் சிக்கியது. இதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கபட்டு மேட்டுபாளையத்திற்கு அனுப்பபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சபனை என்னும் இடத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியானது நெடுஞ்சாலை துறை மூலமாக மேற்கொள்ளபட்டுவருகிறது.
ஸ்தம்பித்த போக்குவரத்து: காலை முதல் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வரும் காரணத்தால் சாலை சீறமைப்பு பணியில் சற்று தொய்வு இருந்தாலும் கூட விரைந்து பணிகளை முடித்து போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்ல கூடிய சாலையில் கல்லாரனி முதல் குன்னூர் வரை பலஇடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து இருக்க கூடிய காரணத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்ல தடை: தற்போது இரண்டு சாலைகளும் துண்டிக்கபட்டுள்ள நிலையில் சாலைகளை விரைந்து சீரமைத்து போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் விதத்தில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பாதையில் மரங்கள் முறிந்துள்ளதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் பேரிகேடுகள் அமைத்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

கலெக்டர் எச்சரிக்கை: குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீலகிரிக்கு வர வேண்டாம்: கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். சாலை சீரமைப்பு பணிகளுக்காக கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications