தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை! வடதமிழகத்தில் எப்போது?
சென்னை: தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலுார் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில், தலா 8 செ.மீ., மழை பெய்தது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ., 10, 11 ஆகிய தேதிகளில், தென்தமிழகத்தில் சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரத்திற்கு பின்னர் மழை பெய்தது. காலை முதலே லேசான வெயில் இருந்த நிலையில் மாலைக்கு மேல் மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications