சென்னை மக்களே அலர்ட்! நெருங்கும் கனமழை! இந்த பொருட்களை எல்லாம் உடனே வாங்கி வையுங்கள்.. லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாளைய தினம் கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான காலகட்டத்தில் நிலைமையைக் கையாள நாம் என்ன மாதிரியான பொருட்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
வங்கக் கடல் பகுதியில் இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது சென்னை அருகே நிலை கொள்ளும் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அக்டோபர் 15ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை: மழை எந்தளவுக்குப் பெய்தாலும் பெரியளவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகத் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம் இதுபோன்ற கனமழை காலங்களில் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கனமழை தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் கூட சிரமம் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற கனமழை காலங்களில் நாம் என்ன பொருட்களைக் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாடு கனமழை.. முதல்வர் ஸ்டாலினின் 20 பெரிய உத்தரவு.. அதில் இந்த 5 அறிவிப்பு.. ரொம்ப முக்கியம்
தேவையான பொருட்கள்: லிஸ்டில் முதலில் இருப்பது குடிநீர் தான். மழை தான் தாக்கப் போகுதே தண்ணீர் எதுக்கு என்ற சந்தேகம் வரலாம். மழை தீவிரமாகப் பெய்தாலும் அந்த நீரை நம்மால் நேரடியாகக் குடிக்க முடியாது. மழை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஆர்ஓ உள்ளிட்ட சாதனங்கள் வேலை செய்யாது. எனவே, மின்சாரம் இருக்கும் போதே குறைந்தது சில நாட்களுக்குத் தேவையான அளவுக்குக் குடிநீரைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து முக்கியமான விஷயம் பால்.. அதிலும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் பால் கட்டாயம் தேவைப்படும். கடந்த காலங்களிலும் கூட மழை பெய்யும் போது பால் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டனர். பால் ஓரிரு நாட்களில் கெட்டுப் போகும் விஷயம்.. மின்சாரம் இருக்காது என்பதால் பிரிட்ஜிலும் வைத்துச் சேமிக்க முடியாதே.. அப்போ என்ன செய்வது என்று கேட்கலாம்..
கவலையே வேண்டாம்.. ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும்.. பால்வளத்துறை அறிவிப்பு!
பால்: ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் 90 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் பாலை விற்பனை செய்கிறது. இந்த பாலை பிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.. வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாது.. எனவே, இதை வாங்கி வைக்கலாம்.. அல்லது பால் பவுடரை கூட நீங்கள் எமெர்ஜென்சிக்கு வாங்கி வைக்கலாம்.
அதேபோல சில நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் உணவுகளையும் ரெடி செய்து வைக்கலாம். சிப்ஸ், நிலக்கடலை பாக்கெட்கள், உலர் பழங்கள், பிஸ்கட் அல்லது ரஸ்க் பாக்கெட்களை வாங்கி வைக்கலாம். அவ்வளவு ஏன் புளி சாதம் கூட இதுபோன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும்.
இது முக்கியம்: டார்ச் லைட் மற்றும் பேட்டரி தேவைப்படும் அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மேலும், மொபைல் போன் சார்ஜ் எப்படியும் சில மணி நேரம் மட்டுமே தாங்கும். எனவே, பேக்அப்பிற்கு ஒரு பவர் பேங்க்கை வைத்துக் கொள்ளுங்கள். மொபைல் மட்டுமின்றி, இந்த பவர்பேங்க் கூட முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதேபோல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான சானிட்டரி நாப்கின் உள்ளிட்டவை வீட்டில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், ஒருவேளை புயல் பாதிப்பு சில நாட்கள் வரை நீடித்தால் மாற்று உடை கூட தேவைப்படலாம். எனவே, அதையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆவணங்கள்: மேலும், வீட்டில் உள்ள ஓட்டுநர் உரிமம், ஆதார், வாக்காளர் அட்டை, வங்கிக் சார்ந்த ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் புகாமல் இருக்கும் வகையில் பிளாஸ்டிக் பேக்குகளில் போட்டு வையுங்கள். இது தவிர முதலுதவி கிட், தேவைப்பட்டால் ரேடியோ, வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அதற்கான உணவுகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
மழை நிற்கும் வெளியே சென்று எதாவது வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே, பணத்தைக் கையில் ரொக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதுபோன்ற மழைக் காலங்களில் பேங்க் நெட்வோர்க் செயல்படாமல் போகலாம். எனவே, சில ஆயிரம் ரூபாயைக் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். மழை பாதிப்பு மோசமாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.. ஆனாலும், இந்த அத்தியாவசிய பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் புயலே அடித்தாலும் கொஞ்சம் பதற்றப்படாமல் இருக்கலாம்.












Click it and Unblock the Notifications