சென்னையே குளிர்ந்திருச்சு! கொளுத்திய மழை.. குளம்போல மாறிய ஜிஎஸ்டி சாலை.. ஸ்தம்பித்த போக்குவரத்து
சென்னை: சென்னையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 30 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதற்கு முன்பு சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் குறிப்பாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. சென்னையில் அனேக இடங்களில் சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று முன்னதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது.
அதன்படியே ஓரளவு நல்ல மழை பெய்ததால் சென்னை குளிர்ந்தது. இந்த நிலையில் இன்றும் சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று காலை முதலே சென்னையில் வெயில் குறைந்து காணப்பட்டது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.
தொடர்ந்து மாலை நேரத்தில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நீண்ட நேரம் மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இடி மின்னலுடன் மழை பெய்தது.
குறிப்பாக சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், டி நகர், கிண்டி, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, வளசரவாக்கம், வடபழனி, அசோக்நகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதேபோல் பூந்தமல்லி, சென்னை விமான நிலையம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அந்த சாலை முழுவதுமே தண்ணீர் வடியாமல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமமடைந்தனர். இதேபோல் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
2 கி.மீ தூரம் கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள், லோடு ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் சென்னை மட்டுமின்றி திருப்பத்தூர், ஆம்பூர், கோவை, குமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதேபோல் விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications