சென்னையில் இன்று முதல் 3 நாளுக்கு வெளுக்கும் கனமழை! காற்றழுத்தம் புயலாக மாறுமா? வெதர்மேன் தகவல்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாறாது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக கடற்கரைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை 2 அல்லது 3 நாட்களுக்கு நல்ல மழையை கொடுக்கும்.

இந்த குறைந்த காற்றழுத்தத்தால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த காற்றழுத்தமானது தமிழக கடற்கரைக்கு இணையாக நகரும். இதனால் அடுத்த இரு நாட்களுக்கு மழை பொழிவை கொடுக்கும்.
இந்த குறைந்த காற்றழுத்தம் அரபிக் கடலுடன் இணைந்திருப்பதால் உள் மாவட்டங்களிலும் நல்ல மழையை கொடுக்கும். தமிழகத்திற்கு கனவு நாட்கள் தொடரும்.
இந்த அக்டோபர் மாதம் தமிழகத்திற்கு அதிக மழை பொழிவுடன் முடிய போகிறது. குறைந்த காற்றழுத்தம் டெல்டா பகுதிகளுக்கு அருகே செல்லும் போது காற்று குவியலானது கடலூருக்கு ஷிப்டாகிவிடும்.
அதன் பிறகு சென்னைக்கும் வரும். இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த இரு நாட்களுக்கு காலை வேளைகளிலும் ஏராளமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மழை அதிகரிக்கும்.
இந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறாது என வெதர்மேன் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு பலனை கொடுக்கு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதற்கு அச்சாரமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையான நேற்று முதலே சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.
இதனால் மக்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் தவித்தனர். பட்டாசு வியாபாரமும் டல்லடித்ததாக சொல்லப்படுகிறது. எனினும் சென்னையில் காற்று மாசானது 20 பாக்கெட் சிகரெட்டுகளை பிடித்து போட்டால் எந்தளவுக்கு விளைவுகள் இருக்குமோ? அந்த அளவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மழை வந்ததால் இந்த விளைவுகள் குறைந்திருந்தன. இல்லாவிட்டால் காற்று மாசால் மக்கள் சிரமமடைந்திருப்பர்.
தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications