அடுத்த 2 மணி நேரம்.. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று ராமநாதபுரதம் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவானது.

இதேபோன்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இன்றும் நெல்லை மாவட்டத்தில் அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை மதியம் வரை விட்டு விட்டு பெய்தது. இதேபோல் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட ஒருவாரத்திற்கான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக, வருகின்ற 23 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இன்று தமிழகத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26ம் தேதி தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 27ம் தேதி தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications