பொங்கல் நாளில் இன்று வெளுத்துக் கட்டப்போகும் மழை.. 3 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்!
சென்னை: பொங்கல் தினமான இன்று காலை 10 மணிக்குள் செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவக்காற்று முழுமையாக இன்னும் விலகாத நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 0.9 கி.மீ உயரத்தில் இந்த சுழற்சி காணப்படுகிறது.

இதனால், தென் மாவட்டங்களில் அநேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 19 ஆம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொங்கல் திருநாளான இன்று (ஜனவரி 14 ஆம் தேதி) தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஜனவரி 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தென் தமிழ்நாடு, கடலோர தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாட்டிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் இன்று (ஜனவரி 14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications