ஜில்லுனு மாறப்போகும் வீக் எண்ட்! 3 நாட்களுக்கு கனமழையாம்.. வானிலை மையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், அதன் பின்னர் பருவமழை தீவிரமடைய தொடங்கியது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர். ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

rain weather tamilnadu

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 20% கூடுதலாக மழை பொழிவை பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 309.2 மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 372.0 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1228.0 மி.மீ, கோவையில் 950.8 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 122.3 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -47 சதவிகிதம் குறைவாகும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்திருக்கிறது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே இரவில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. எனவே, வட மாவட்டங்களில் வெயில் பாதியாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மாவட்டங்களில் 29ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

01.10.2024 மற்றும் 02.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு (26.09.2024 மற்றும் 27.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2- 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 29 மற்றும் 30ம் தேதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27.09.2024: மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28 முதல் 30 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: 26 முதல் 30 வரை தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+