ஆரஞ்சு அலர்ட்... சென்னையில் அடித்து நொறுக்கும் மழை + புயல் காற்று.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் படுத்தி எடுத்து வந்தது. இதற்கிடையே திடீரென சென்னையில் கிளைமேட் மொத்தமாக மாறிய நிலையில், மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே சென்னையில் இன்று மழை எந்தளவுக்கு இருக்கும் என்பது தொடர்பாக வெத்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சென்னை கிளைமேட்
அதிலும் சென்னையில் வெப்பத்துடன் ஈரப்பதமும் இணைந்துவிடவே மக்கள் அசவுகரியமாக உணர்வது அதிகரித்து வருகிறது. ஈரப்பதம் சேர்வதால் பதிவாகும் வெப்பம் குறைவாக இருந்தாலும் மக்கள் உணரும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் வானிலை மொத்தமாக மாறியது.
கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு சென்னையைத் திடீரென மழை மேகங்கள் சுற்றி வளைத்தன. தூசி எழும்பிய நிலையில், சூரைக்காற்றும் வீசியது. இதற்கிடையே இப்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி வருகிறது. இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் மொத்தம் மூன்று அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்
தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "சென்னை ரெட் தக்காளிஸ்.. நகரம் முழுக்க பலத்த மழை பெய்யும். 15 கி.மீ உயரத்திற்கு உள்ள மழை மேகங்கள் உள்ள நிலையில், அதிக டெசிபல் ஒலியுடன் கூடிய இடி மின்னல்கள் ஏற்படும். அதாவது இடியுடன் கூடிய மழை மேகங்கள் அதிக மேல்நோக்கி நகர்வுகளைக் கொண்டுள்ளது. சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.. எனவே, அதை மிஸ் செய்யாதீர்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
புயல் காற்று
முன்னதாக மாலை 4 மணியளவில் அவர் தனது ட்விட்டரில், "சென்னையில் மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்பே தூசி மற்றும் புயல் காற்று. மழை மேகங்கள் நகரின் வடமேற்கிலிருந்து அதாவது அம்பத்தூர், ஆவடி ரீஹில்ஸ் பெல்ட் வழியாக நகர்கின்றன. பலத்த காற்று வீசும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் வாகனங்களை மரத்தின் கீழ் நிறுத்த வேண்டாம். இன்று அதிக இடி மற்றும் மின்னல் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதில் கொரட்டூர் ஏரி அருகே எந்தளவுக்குத் தூசியும் காற்றும் வீசுகிறது என்பதையும் பகிர்ந்துள்ளார்.
நல்ல மழை
அதேபோல பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கொடுத்திருந்த முதல் அப்டேட்டில், "செம்ம வெப்பமான நாளுக்குப் பிறகு மான்ஸ்டர் ரெட் தக்காளிகள் சென்னையை நோக்கி நகர்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பெல்ட்டில் பலத்த காற்று மற்றும் கடுமையான இடியுடன் கூடிய மழைக்குத் தயாராகுங்கள். சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகள் பலத்த காற்றுடன் மழை பெய்யும்" என்று ட்வீட் செய்திருந்தார்.
ஆரஞ்சு அலர்ட்
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னை புறநகர்ப் பகுதிகளாக அறியப்படும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல இன்று மாலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டி வருகிறது.
தொடர்ச்சியாகப் பல நாட்கள் வெப்பம் அதிகமாகப் பதிவாகி வந்த நிலையில், இந்த திடீர் மழையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். அதேநேரம் மழை காரணமாக நகரில் சில இடங்களில் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்திலும் சுமார் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்து வந்தது.












Click it and Unblock the Notifications