அடுத்த 2 மணி நேரம்.. குடை இல்லாமல் வெளியே போகாதீங்க.. 16 மாவட்டங்களுக்கு பறந்த வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்கால வெயில் கொளுத்தி எடுக்கிறது. நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. எனினும் பல மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இதேபோன்று இன்று மதிய நேரங்களில் சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதில் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மற்றும் குமரி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் மிதமான மழை
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, நாகப்பட்டினம், திருநெல்வேலி என 9 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு மணி நேரத்தில் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கலாம். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- "குமரிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
மே 4 வரை மழை தொடரும்
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 30 ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 4 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று, நாளை எப்படி?
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று (28-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை (29-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை தொடங்கி மே மாதம் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3" செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* ஏப்.30 முதல் மே மாதம் 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல இன்று தொடங்கி மே 2 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
மழை அளவு (செமீ)
கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடம் (மயிலாடுதுறை) 6 செமீ மழை பெய்துள்ளது. நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 5 செமீ மழை பெய்துள்ளது. உத்தமபாளையம் (தேனி), மஞ்சளாறு (தேனி), கழுகுமலை (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.
பெரியகுளம் PTO (தேனி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), சாத்தியார் (மதுரை) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), எழுமலை (மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மிமிசல் (புதுக்கோட்டை), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பெரியகுளம் (தேனி), தம்மம்பட்டி (சேலம்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிற்றாறு | (கன்னியாகுமரி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
வலங்கைமான் (திருவாரூர்), சிதம்பரம் (கடலூர்), பழனி (திண்டுக்கல்), பெரியாறு (தேனி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கடவூர் AWS (கரூர்), புவனகிரி (கடலூர்), மதுரை விமானநிலையம் (மதுரை), புலிப்பட்டி (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), நீடாமங்கலம் (திருவாரூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), ராஜபாளையம் (விருதுநகர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), தல்லாகுளம் (மதுரை) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.2° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும் ஒருசில இடங்களில் சற்று குறைந்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-40° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39* செல்சியஸ், வடதமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 3-35° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 20-28* செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி மே மாதம் 2ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications