தீபாவளி வரை பொத்துக்கொண்டு கொட்டப்போகும் மழை.. தமிழ்நாட்டில் குடையோடு பட்டாசு வெடிக்கலாம்
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக வியாபாரங்கள் களை கட்டியுள்ள நிலையில் 12ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் உள்ள அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம், கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஐப்பசி மாதம் என்றாலே அடைமழை காலம்தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலத்தில் இரண்டு தினங்களுக்காவது மழை பெய்யும். கொஞ்சநேரம் மழை நின்றாலே போதும் பட்டாசு வெடிக்கலாம் என்று சிறுவர்களும் சிறுமிகளும் வேண்டிக்கொள்வார்கள். இந்த ஆண்டு தீபாவளி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் குடை பிடித்துக்கொண்டு வெடி வெடிக்க வேண்டியதுதான்.












Click it and Unblock the Notifications