தீபாவளியோடு மழையும் முடிஞ்சது.. இனி அடுத்த வாரம்தான்! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. குறிப்பாக தீபாவளிக்கு மழை வெளுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்றுடன் கனமழையின் தீவிரம் ஓய்ந்திருக்கிறது. இன்று தொடங்கி 9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்தது. குறிப்பாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் சென்னையில் கனமழை பெய்தது. சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் டானா புயல், மழை மேகங்களை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பக்கம் இழுத்து சென்றுவிட்டது.

இப்படி இருக்கையில், தீபாவளியை ஒட்டி மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கோவை, ஈரோடு போன்ற கொங்கு மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்திருந்தது. தீபாவளியான அக்.31, நவ. 1 மற்றும் 2ம் தேதிகளிலும் கனமழை பெய்திருந்தது. இந்நிலையில் நேற்றுடன் கனமழையின் தாக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே நவ.4ம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல நவ.5ம் தேதி தொடங்கிய 9ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: நவ.7ம் தேதி வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.6ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.7ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications