நைட்டு ஃபுல்லா கொட்டிய மழை.. இன்றும் விடாது! சென்னையில் வெளுக்க போகுது.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தலைநகர் சென்னையில் மிதமான மழைக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒரு சில இடங்களில் மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் கடகடவென நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி, குமரி தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவும் மழை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமையும் சென்னையில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று முன் தினம் காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவியது. இது நேற்று இரவு வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் வலுப்பெற்றது.
இன்று பிற்பகலில் இது தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது. தெற்கு கொங்கன் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இன்று பலத்த காற்று வீசும்
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
20-08-2025 மற்றும் 21-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-08-2025 மற்றும் 23-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (19-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று 19-08-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 20-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21-08-2025 மற்றும் 22-08-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications