இடி, மின்னலுடன் பிச்சு உதறப் போகும் மழை.. திருவள்ளூர் டூ தென்காசி வரை.. 13 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலை சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து கட்டிய நிலையில் இன்றும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் தென்காசி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து வடகிழக்கு மாவட்டங்களில் பெரும்பாலான நாட்களில் வெயில் கொளுத்தி எடுத்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான நாட்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை வெளுத்து எடுக்கிறது.

13 மாவட்டங்களில் மழை
நேற்றும் கூட பகல் முழுக்க வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென கிளைமேட் மாறி, பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, கரூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி 10 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு வார அப்டேட்
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான வானிலை அப்டேட்டில் கூறியிருப்பதாவது:- "தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழக்கு சான்ஸ்
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே-7 முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே-10 மற்றும் 11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (05-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (06-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications