சென்யார் புயல் உருவாகுமா? எங்கே கரையை கடக்கும்? தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஹேமசந்திரன்
சென்னை: இந்திய கடல் பகுதியில் உருவாகியுள்ள 2 காற்றழுத்தங்களும் புயலாக மாறுமா என்பது குறித்தும், சென்னைக்கு தீவிர மழை எப்போது என்பது குறித்தும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மொத்தம் 2 காற்றழுத்த பகுதிகள் உருவாகியுள்ளன. அதில் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இது குமரி கடல், மன்னார் வளைகுடா வரை நீடித்து காணப்படுவதை பார்க்க முடிகிறது. மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி, அந்தமானுக்கு கிழக்கே மலாக்கா நீரிணை பகுதியில் உருவாகி அது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது கடந்த இரு தினங்களாக ஒரே பகுதியில் இருக்கிறது.
அந்தமான்
அந்தமானை ஒட்டி நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நகரவில்லை. இந்த நிலையில் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு அருகே இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
36 மணி நேரம்
அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த 3 தினங்களாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது நாளை முதல் படிப்படியாக குறையும்.
இலங்கையில் மழை
இலங்கைக்கு அருகே இருக்கும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும் புயல் சின்னமாகவும் தீவிரமடையும் போது இலங்கையில் பருவமழை தீவிரமடையும். தமிழகத்தில் நவ.25, 26 ஆகிய தேதிகளில் பருவமழை இயல்பை விட சற்று குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கடற்கரை
மீண்டும் இது இலங்கைக்கு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் போது நவம்பர் 27ஆம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 27ஆம் தேதியும் வடதமிழகத்தில் நவம்பர் 28ஆம் தேதியும் மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடதமிழகத்தில் பருவமழை
குறிப்பாக 28, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வடதமிழகத்தில் பருவமழை தீவிரமடையும். இந்த சென்யார் புயலின் காரணமாகவும் மழை பொழிவை நாம் எதிர்பார்க்கலாம். தென் மாவட்டங்களில் ஏன் அதிக மழை பொழிவு என்றால் தற்போது தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 3 நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் 25ஆம் தேதியான நாளை காலை வரை தென் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும். எனினும் பெருமழைக்கான வாய்ப்பில்லை.
2, 3 நாட்களுக்கு மழை
நாளை முதல் தென் மாவட்டங்களில் மழை குறையும். நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 2, 3 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு. அதைத் தொடர்ந்து இலங்கையில் அடுத்த இரு நாட்களுக்கு மழைபொழிவு தீவிரமடையும். 27ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை அதிகரிக்கும். மலாக்கா நீரிணை பகுதியில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த பகுதி கடலிலேயே கரைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைவதற்கான சாதக சூழல் காணப்படுகிறது.
எந்த பகுதியில் கரையை கடக்கும்?
இது புயலாக மாறும் பட்சத்தில் எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பதெல்லாம் வரும் நாட்களில் உறுதிப்படுத்தலாம். சென்னையை பொருத்தமட்டில் வார இறுதி நாட்களான 29, 30 ஆகிய தேதிகளில் உறுதியான மழைக்கான வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications