வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 2 நாட்கள் முக்கியம்? வெதர்மேன் நறுக்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ள நிலையில், இதனால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த பருவமழை சீசனில் நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைக் காட்டிலும் அதிகளவே தமிழகத்தில் மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்:
இந்தச் சூழலில் சமீபத்தில் மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருந்தது. இடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெற்ற நிலையில், மீண்டும் அது காற்றழுத்த தாழ்வு நிலையாக நேற்று வலுவிழந்தது. அப்போது அது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிலையில், இது தமிழகத்திற்கு மழையைத் தருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், "வெஸ்டெர்லி டர்ஃப் (Westerly Trough) காரணமாக இழுத்துச் செல்லப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையானது இப்போது கடலில் நிலைகொண்டு இருப்பதால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பாதிப்பு இல்லை. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பிளவுபட்டு, குறைந்த அளவிலான சுழற்சியைக் கொண்டுள்ளன.
அடுத்த 2 நாட்கள்:
இது அடுத்த 2 நாட்களில் அமைப்பை வலுவிழக்கச் செய்து, கிறிஸ்துமஸ் நாள் அல்லது டிச. 26, 27 தேதிகளில் தமிழகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும். இதன் காரணமாக கேடிசிசி (சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்) பகுதிகளில் கிறிஸ்மஸ் நாளிலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்யும்.
கடந்த 2 நாட்களாகத் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களான சேலம், திருச்சி, மதுரை, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நிலையற்ற சூழலே இருக்கிறது. இன்று கூட கிட்டதட்ட அதே நிலை தான். சேலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர் போன்ற இடங்களில் மழை பெய்யும். பெங்களூரிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை ஹிட் அண்ட் மிஸ் போலவே இருக்கும்.. சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்களில் மழை பெய்யாமலும் போகலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்:
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "நாளை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச. 23 மற்றும் 24 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 25ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications