மும்பைக்கு ‘ரெட்’ அலர்ட்.. இமாச்சல பிரதேசத்தில் மழை கொட்டித் தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் பருவமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலைகள் பல முற்றிலும் உருக்குலைந்து விட்டன. இதனால், பொதுப் போக்குவரத்து, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஎம்டி தலைவர் சுரேந்தர் பால், இமாச்சல பிரதேசத்தின் சிம்லா, சோலன், சிர்மவுர், மண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர் மற்றும் உனா ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கனமழை காரணமாக பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கர்நாடகா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரெட் அலர்ட்: புனேவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் மும்பை, தானே, கட்சிரோலி மற்றும் கோண்டியா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், ரெட் அலர்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு ஹரியானா, சண்டிகர் மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, வடமேற்கு இந்தியாவில் சில இடங்களில் லேசான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை: வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்யக்கூடும். ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று உத்தரகாண்ட் ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று உத்தரகாண்டின் சாமோலி, பாகேஷ்வர், சம்பவத் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications