சென்னையில் 6,200 பேர் நிவாரண முகாம்களில் அடைக்கலம்! இயற்கையிடம் தோற்ற பணம், பதவி, வீடு, கார்!
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து வருவதால் 6,200 பேர் இதுவரை தமிழக அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது "மிக்ஜாம்" புயலாக வலுவடைந்து சென்னையை நேற்றிரவு முதல் புரட்டி எடுத்து வருகிறது. 2015ஆம் ஆண்டு பெய்த மழையை விட கூடுதலாக 1 செமீ தற்போதைய நிலவரப்படி சென்னையில் பதிவாகியுள்ளது. இன்று இரவு வரை மழை இன்னும் தீவிரமாக வெளுத்து வாங்கும் என்பதால் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அரசு இயந்திரம் என்ன தான் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற போராடினாலும் இயற்கையிடம் வெல்ல முடியவில்லை. இதனால் தான் சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கார்கள் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அளவுக்கு வெள்ளநீரின் அளவு உயர்ந்து கொண்டே செல்கின்றன.
இதனால் பேரிடர் மேலாண்மைத்துறை உதவியை கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர ஆரம்பித்துள்ளனர். அதன்படி சென்னையில் தற்போதைய நிலவரப்படி 153 முகாம்களில் 6200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளை சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. இதனிடையே மழை ஓய்ந்த பிறகு தான் சென்னையில் புயல் வெள்ளச் சேதாரங்கள் எந்தளவு என்பது முழுமையாக தெரிய வரும்.
இப்போதே பல பகுதிகளுக்கு மீனவர்கள் உதவியுடன் படகுகள் கொண்டு செல்லப்பட்டு மீட்புப் பணிகள் ஆரம்பித்துவிட்டன. நேரம் கூட கூட மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்பதால் சென்னை மாநகர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications