கொளுத்தி போட்ட சூரியன்! 125 வருடத்தில் இல்லாத அளவுக்கு இந்த பிப்ரவரியில்தான் வெயில் அதிகமாம்
டெல்லி: கடந்த 125 ஆண்டுகளில் பிப்ரவரி மாதங்களில் பதிவான வெயிலை விட, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பதிவான வெயில்தான் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இப்படி சொல்லிவிட்டு சைலன்டாக இருந்தால் பரவாயில்லையே.. இனி வரும் மாதங்களிலும் வெயில் மண்டையை பொளக்கும் என்றும் அல்லவா எச்சரித்திருக்கிறது.

கடந்த ஜனவரி மட்டும் என்ன சும்மாவா? 1901ம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்று வரை அதிக வெப்பமான ஜனவரி என்பது 2024ம் ஆண்டுதான். அதற்கடுத்து 2025 ஜனவரிதான். அதை தொடர்ந்து, நான் மட்டும் என்ன சாதாரணமா? என்கிற கணக்காக, பிப்ரவரியும் அதிக வெயிலை வெளியேற்றியிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, 1901ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை பிப்ரவரி மாதத்தில் பதிவான வெயிலை கணக்கிட்டு பார்த்தால் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அதிக வெப்பமானதாக இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த மாதத்தின் சராசரி வெப்பநிலை 22.04 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.34 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
வெப்பம் நம்மை போன்ற முடி உள்ள மண்டைகளை மட்டும் பதம் பார்ப்பதில்லை. மாறாக கோதுமை போன்ற முக்கிய பயிர்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. எனவே, வெப்பம் ஆபத்தானதுதான். மழை காலத்தில் மண் ஊரி, குளிர்காலத்தில் துளிர்விட்டு, கோடையில் தகதகவென கோதுமை மின்னும். ஆனால் வெயில் அதிகமானால் கோதுமை விளைச்சல் படுத்துவிடும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால் வட மாநிலங்களிலும், தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் உள்ள வடக்கு உழைப்பாளிகளும் கோதுமை பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
பிப்ரவரி முடிந்துபோன கதை என்றாலும் கூட, அது முக்கியமான மெசேஜை விட்டு சென்றிருக்கிறது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடக்கு கர்நாடகா ஆகிய இடங்களில் மார்ச் முதல் மே வரை இயல்பை விட அதிக வெப்ப அலை நாட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதுதான் அந்த மெசேஜ். இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதிக வெயில் காரணமாக வயதானவர்கள், இணை நோய் கொண்டவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த கோடையில் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர். அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, சர்க்கரை அதிகம் இல்லாத பழச்சாறுகளை குடிப்பது, மோர், இளநீரை எடுத்துக்கொள்வது, செரிமானத்திற்கு உகந்த உணவை சேர்த்துக்கொள்ளுதல் ஆகியவை மூலம் கோடைக்கால நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications